search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொல்கத்த நைட் ரைடர்ஸ்"

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா - டெல்லி அணிகள் இடையிலான பரபரப்பான ஆட்டம் ‘டை’ ஆனது. சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது. #IPL2019 #DCvKKR
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு டெல்லியில் அரங்கேறிய 10-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொண்டது. டெல்லி அணியில் 4 மாற்றமாக இஷாந்த் ஷர்மா, கீமோ பால், ராகுல் திவேதியா, அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் கழற்றிவிடப்பட்டு அவர்களுக்கு பதிலாக கிறிஸ் மோரிஸ், ஹர்ஷல் பட்டேல், சந்தீப் லாமிச்சன்னே, ஹனுமா விஹாரி இடம் பிடித்தனர். கொல்கத்தா அணியில் காயத்தால் அவதிப்படும் சுனில் நரினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு நிகில் நாய்க் சேர்க்கப்பட்டார்.

    ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய பணித்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணி டெல்லியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. நிகில் நாய்க் (7 ரன்), கிறிஸ் லின் (20 ரன்), உத்தப்பா (11 ரன்), நிதிஷ் ராணா (1 ரன்), சுப்மான் கில் (4 ரன்) ஆகியோர் சீக்கிரம் நடையை கட்டினர். இதனால் கொல்கத்தா அணி 61 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை (9.1 ஓவர்) இழந்து தத்தளித்தது.

    இந்த நெருக்கடியான கட்டத்தில் 6-வது விக்கெட்டுக்கு கேப்டன் தினேஷ் கார்த்திக்கும், ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல்லும் கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ரஸ்செல் வழக்கம் போல் பேட்டை ராக்கெட் வேகத்தில் சுழட்டினார். லாமிச்சன்னேவின் சுழற்பந்துவீச்சில் 2 சிக்சர்களை ஓடவிட்டார். ஆனால் 21 ரன்னில் இருந்த போது வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் வீசிய ‘புல்டாஸ்’ பந்து ஒன்று அவரது இடது தோள்பட்டையை பலமாக தாக்கியது. வலியால் துடித்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அதை பற்றி கவலைப்படாமல் எதிரணியின் பந்து வீச்சை தொடர்ந்து துவம்சம் செய்தார். இன்னொரு பக்கம் கேப்டன் தினேஷ் கார்த்திக் பொறுப்புணர்வுடன் ஆடினார்.


    ரஸ்செலின் அதிரடியால் கொல்கத்தா அணி வலுவான ஸ்கோரை நோக்கி பயணித்தது. ரஸ்செல் 62 ரன்களும் (28 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 50 ரன்களும் (36 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். அடுத்து வந்த பியூஸ் சாவ்லா 12 ரன்களும், குல்தீப் யாதவ் 10 ரன்களும் (நாட்-அவுட்) எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது.

    பின்னர் கடின இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா அமர்க்களப்படுத்தினார். ஷிகர் தவான் (16 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (43 ரன்), ரிஷாப் பான்ட் (11 ரன்) ஆகியோர் சீரான இடைவெளியில் வெளியேறினாலும் பிரித்வி ஷா உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரித்வி ஷா 99 ரன்களில் (55 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். ஐ.பி.எல்.-ல் ஒரு வீரர் 99 ரன்னில் அவுட் ஆவது இது 2-வது நிகழ்வாகும்.

    கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்டது. 20-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் வீசினார். முதல் 5 பந்துகளில் 4 ரன் எடுத்த டெல்லி அணி ஹனுமா விஹாரியின் (2 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தது. கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட போது, அதை எதிர்கொண்ட இங்ராம் பந்தை அடித்து விட்டு வேகமாக ஓடினார். 2-வது ரன்னுக்கு திரும்பிய போது இங்ராம் (10 ரன்) ரன்-அவுட் செய்யப்பட்டார். இதனால் பரபரப்பான இந்த ஆட்டம் சமனில் (டை) முடிந்தது. 20 ஓவர்களில் டெல்லி அணி 6 விக்கெட்டுக்கு 185 ரன்கள் சேர்த்தது.



    இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க ‘சூப்பர் ஓவர்’ முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய டெல்லி அணி ஒரு விக்கெட்டுக்கு 10 ரன் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணியால் சூப்பர் ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 7 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் டெல்லி அணி 3 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது. சூப்பர் ஓவரில் டெல்லி அணிக்கு ரபடா அபாரமாக பந்து வீசினார்.

    3-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணிக்கு இது 2-வது வெற்றியாகும். முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த கொல்கத்தாவுக்கு இது முதலாவது தோல்வியாகும். #IPL2019 #DCvKKR
    ×